நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு



திணைக்களத்தின் வரலாறு

ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டுகளில் இலங்கையில் நீதிமன்றத்தினால் நன்னடத்தை முறை பரீட்சார்த்தமாக அமுல்படுத்தப்பட்டது. 1907 இல் இங்கிலாந்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட தவறாளிகள் தொடர்பான நன்னடத்தை கட்டளைச் சட்டம் இலங்கையிலுள்ள நீதிமன்றங்கள் தொடர்பிலும் தாக்கம் செலுத்தியது. 1944 இல் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட 42 ஆம் இலக்க நன்னடத்தை கட்டளைச் சட்டமானது மேலே குறிப்பிடப்பட்ட தாக்கங்களின் பெறுபேறாகும். இந்தக் கட்டளைச் சட்டத்தின் மூலம் நன்னடத்தை முறை இலங்கை நீதிமன்றங்களிலும் அமுலுக்கு வந்தது.

இங்கிலாந்தின் நன்னடத்தைச் சேவைகள் ஊடாக இலங்கையிலும் நன்னடத்தைச் சேவைகளை ஆரம்பிக்கும் செயற்பணி, இங்கிலாந்தின் மதியுரையாளரொருவரான திரு எச்.ஏ. லீடீனிடம் பொறுப்பளிக்கப்பட்டதுடன், அதற்கமைய சிறைச்சாலைகள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட நன்னடத்தைச் சேவைகள், நன்னடத்தை அலுவலர்கள் சிலர் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. பரீட்சார்த்தமாக நாட்டிலுள்ள ஒரு சில நீதிமன்ற பிரிவுகளில் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டு, பின்னர் இந்த சேவை நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனையடுத்து இச்சேவையை மேம்படுத்த வேண்டிய தேவையும் எழுந்தது.

1949 இல் நீதிபதி திரு கிறேசியனின் தலைமையில் நியமனம் செய்யப்பட்ட குழுவின் சிபாரிசுள் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் சகல நீதிமன்ற வலயங்களும் உள்ளடக்கப்படும் வகையில் நன்னடத்தைச் சேவை விஸ்தரிக்கப்பட்டது. இந்த சேவையின் நிர்வாக நடவடிக்கைகள் சிறைச்சாலை மற்றும் நன்னடத்தைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டன. 

குழந்தை, இளைஞர் கட்டளைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை மற்றும் சிறுவர் நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து சிறுவர்களுக்கு ஆற்றப்படுகின்ற சேவைகளை ஒன்றுதிரட்டுவதன் முக்கியத்துவம் தொடர்பாக திரு சிறில் ஹெம்லீனின் அறிக்கையினூடாக சுட்டிக்காட்டப்பட்டது. மேற்படி சிபாரிசுக்கு அமைய 1956 அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது.  

இவ்வாறு 1956 இல் ஆரம்பிக்கப்பட்ட திணைக்களம் முதலில் சமூக சேவைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அடிக்கடி பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இதனைக் கொண்டு வந்தன. 1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இது மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, சமூக நலன்புரி அமைச்சின் கீழும், 1994 ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் சுகாதார, பெருந்தெருக்கள், சமூக சேவைகள் அமைச்சின் கீழும், 2001 ஆம் ஆண்டில் சமூக சேவைகள், மீனவர் சமுதாய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழும், 2002 இல் சுகாதாரம் போசாக்கு, நலன்புரி அமைச்சின் கீழும், 2003 இல் சமூக நலன்புரி அமைச்சின் கீழும், 2004 ஆம் ஆண்டில் மகளிர் அபிவிருத்தி, சமூக நலன்புரி அமைச்சின் கீழும், 2005 ஆம் ஆண்டு முதல் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அபிவிருத்தி அமைச்சின் கீழும், 2010 ஆம் ஆண்டு மதல் இதுவரைகாலம் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சின் கீழும் 2015 ஆம் ஆண்டிலிருந்து மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழும் இந்தத் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது. 

 

மாகாண சபைகள் தாபிக்கப்பட்டமையும், திணைக்களத்தின் அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்டமையும்

நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தடுப்பு இல்லங்கள், சான்றுப்படுத்தப்பட்ட பாடசாலைகள், நன்னடத்தை அலுவலகங்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகள் நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் விஸ்தரிக்கப்பட்டதுடன், நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் உதவி ஆணையாளர்கள், நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் ஆணையாளருக்கு உதவுவதற்காக நியமனம் செய்யப்பட்டார்கள். 

1987 இன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுலுக்கு வந்ததையடுத்து, மேற்படி ஒழுங்கமைப்பு மாற்றமடைந்ததுடன், நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவையானது, மாகாண சபைகளுக்கு பன்முகப்படுத்தப்பட்டது. அத்துடன் அதுவரை ஆணையாளருக்கு உதவுவதற்காக நியமனம் செய்யப்பட்டிருந்த உதவி ஆணையாளர் பதவிகளும் ரத்துச் செய்யப்பட்டன.

மாகாண சபைகளின் கீழ் மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் ஆணையாளர்கள் சகல மாகாணங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதுடன், நன்னடத்தை அலுவலகங்கள் அவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இதனை அடுத்து தேசிய திணைக்களத்தினால் வெளிநாட்டு தத்தெடுத்தல் விடயம், மாகாண நன்னடத்தைத் திணைக்களங்களை ஒருங்கிணைப்புச் செய்து மேற்படி திணைக்கள அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல் மற்றும் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களைத் தயார் செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

 

சிறுவர் உரிமைகள் சமவாயத்தை அமுல்படுத்தல்

1991 ஆம் ஆண்டு இலங்கை சிறுவர் உரிமைகள் பற்றிய பூகோளப் பிரகடனத்தில் கைச்சாத்திட்டதுடன், 1992 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டது. மேற்படி சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் காணப்படுகின்ற யாப்புக்களை அமுல்படுத்த வேண்டியதன் தேவைக்காக 1999 ஆம் ஆண்டு திணைக்களத்தினால் தமது வெளிக்கள கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதை நோக்காகக் கொண்டு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் எனும் புதிய பதவி உருவாக்கப்பட்டு அதற்கு அலுவலர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டார்கள். தற்போது இவர்கள் நாடு முழுவதும் அமைந்துள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டு சேவையாற்றி வருகின்றனர். இதனூடாக நன்னடத்தை விடயம் மற்றும் சிறுவர் பராமரிப்பு விடயத்திற்கு முன்னுரிமை வழங்கி நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.

 




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk